துர்நாற்றம் வீசும் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு

துர்நாற்றம் வீசும் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு
திருப்பூர்
தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையத்தில் உள்ள துர்நாற்றம் வீசும் கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.
கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு பகுதியில் தனியார் தாய்க்கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன் அருகில் உள்ள வீடுகளில் ஈ தொல்லை அதிகாக உள்ளதாக அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும், பேரூராட்சி நிர்வாகத்திடமும் மனு கொடுத்து முறையிட்டனர்.
மேலும் அரசின் விதிமுறைகளை மீறி கோழிப்பண்ணை செயல்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சின்னக்காம்பாளையம் 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஆகியோரிடம் நேற்று கலெக்டர் கிறிஸ்துராஜ் கலெக்டர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார்.
கலெக்டர் விசாரணை
இதற்காக கோழிப்பண்ணைக்கு அருகே குடியிருக்கும் 60 குடியிருப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இரு தரப்பினரிடமும் கலெக்டர் விசாரணை நடத்தினார். உரிய முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதுகுறித்து சின்னக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, 'தனியார் தாய்க்கோழிப்பண்ணையில் இருந்து கடும் துர்நாற்றம், ஈ தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தது. சுகாதார சீர்கேட்டால் மிகவும் பாதிக்கப்பட்டோம். தொடர் போராட்டம் காரணமாக கோழிப்பண்ணையில் இருந்து 50 சதவீதம் கோழிகளை இடம்மாற்றி விட்டனர். மீதம் உள்ள கோழிகளையும் அப்புறப்படுத்தி பண்ணையை காலி செய்ய வேண்டும். சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முறையிட்டுள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்' என்றனர்.






