இதய தின விழிப்புணர்வு பேரணி


இதய தின விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 30 Sept 2023 1:00 AM IST (Updated: 30 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரி சார்பில் இதய தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவை


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சார்பில் இதய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மோகன் குமார் தொடங்கி வைத்தார். இதற்கு தலைமை தாங்கி டீன் நிர்மலா கூறியதாவது:-


புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் இதய நோய் ஏற்படுகிறது. இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 1,790 பேருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தமிழகத்திலேயே மிக அதிகமாகும். இந்தியாவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் இதய நோய் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் 60 சதவீதம் இதய நோய் பாதிப்பால் ஏற்படுகிறது.

எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடங்கி ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு, அரசு கலைக் கல்லூரி சாலை வழியாக மீண்டும் ஆஸ்பத்திரியை வந்தடைந்தது.

அதைத்தொடர்ந்து அறிவுத்திறன், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஐ.எம்.ஏ. தலைவர் துரைக்கண்ணன், இதய சிகிச்சை பிரிவு டாக்டர் நம்பிராஜன், நர்ஸ்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story