வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை காப்பாற்றிய மீனவ சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றி - அண்ணாமலை
உயிர்காக்கக் களமிறங்கிப் பாடுபட்ட மீனவ சகோதரர்கள் அனைவருக்கும் தமிழகம் பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
தென்மாவட்டங்களில், பெருமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 10,000 க்கும் அதிகமான பொதுமக்களை, உவரி, கூத்தங்குளி, இடிந்தகரை, கூட்டப்புளி, சின்னமுட்டம், தூத்தூர் உள்ளிட்ட திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 400 மீனவ சகோதரர்கள், படகுகள் மூலம் மீட்டுள்ளனர்.
குறிப்பாக, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிந்துபூந்துறை, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, நொச்சிக்குளம், முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீனவ சகோதரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களை மீட்டதோடு, பொதுமக்களுக்குத் தேவையான உணவு, பால், தண்ணீர் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கி, இந்தக் கடினமான நேரத்தில், பொதுமக்களுக்குப் பேருதவிகள் புரிந்துள்ளனர்.
தாங்கள் காயமடைந்தாலும், தங்கள் படகுகள் சேதமடைந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாது, வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களைக் காப்பாற்றிய மீனவ சகோதரர்களின் பேருதவிகளுக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிர்காக்கக் களமிறங்கிப் பாடுபட்ட மீனவ சகோதரர்கள் அனைவருக்கும் தமிழகம் பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளது.
தமிழக அரசு உடனடியாக, இந்தக் கடினமான நேரத்தில், உயிர்காக்கும் பணிகளில் ஈடுபட்ட மீனவ சகோதரர்கள் அனைவர் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேட்டை உருவாக்கி, அவர்களுக்கான எரிபொருள் செலவுகளையும், படகுகள் பழுதுபார்க்கும் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டு, மேலும் அவர்களின் தன்னார்வத் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000 பாராட்டுத் தொகை வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.