பலியான தம்பதி பற்றி உருக்கமான தகவல்கள்
குன்னூர் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தம்பதி பலியாகினர்.
குன்னூர்
குன்னூர் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தம்பதி பலியாகினர்.
பஸ் கவிழ்ந்தது
தெலுங்கானா மாநிலம் செகேந்திராபாத் பகுதியில் இருந்து 35-க்கும் மேற்பட்டோர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பஸ்சில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு வந்தனர். தொடர்ந்து ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு சுற்றுலா பயணிகள் ஊட்டியில் இருந்து கொடைக்கானல் செல்வதற்காக பஸ்சில் புறப்பட்டனர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் வளைவில் திரும்பும் போது, எதிரே வந்த மோட்டாார் சைக்கிள் மீது சுற்றுலா பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். பின்னர் பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தம்பதி பலி
இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த சுற்றுலா பயணிகள் 30 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விசாரணையில் அவர்கள் ஊட்டியை சேர்ந்த சையது (வயது 42), அவரது மனைவி அஸ்மா (35) என்பதும், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு சையது மனைவியுடன் ஊட்டிக்கு திரும்பி வரும்போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து பலியான தம்பதி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கிரேன் வரவழைக்கப்பட்டு சுற்றுலா பஸ் மீட்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.