தஞ்சையில், சுட்டெரித்த வெயிலால் வாகன ஓட்டிகள் அவதி


தஞ்சையில், சுட்டெரித்த வெயிலால் வாகன ஓட்டிகள் அவதி
x

தஞ்சையில் சுட்டெரித்த வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தர்பூசணி பழம், இளநீர் விற்பனை அமோகமாக நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சையில் சுட்டெரித்த வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தர்பூசணி பழம், இளநீர் விற்பனை அமோகமாக நடந்தது.

சுட்டெரித்த வெயில்

தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே, மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலத்தில் காலங்களில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த நிலையில் பருவகால மாற்றத்தின் காரணமாக தஞ்சையில் அடிக்கடி மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக இருந்து வருகிறது. மிதமான வெயில் அடிக்க வேண்டிய இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது. பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் இரவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. தஞ்சையில் நேற்று வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. காலை 9 மணி முதலே கொளுத்த தொடங்கிய வெயினால் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனல் காற்று வீசியது.

வாகன ஓட்டிகள் அவதி

மேலும் சாலைகளில் கோடை காலத்தை போல கானல் நீர் தோன்றியது. வெயிலின் தாக்கம் காரணமாக வாகனஓட்டிகள் அவதியடைந்தனர். இந்த வெயில் கொடுமையால் பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர்.

சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சாலையில் நடந்து சென்றவர்களும் குடைகளை பிடித்துக்கொண்டும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகத்தில் துணியை மூடிக்கொண்டும் சென்று வந்தனர். பொதுமக்கள் சிலர் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் தெரிவித்தனர்.

தர்பூசணி விற்பனை

அதுமட்டுமின்றி வெயிலின் சூட்டை தணிக்க சாலை ஓரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த இளநீர், தர்பூசணி கடைகளில் விற்பனை களைகட்டியது. மேலும், குளிர்பான கடைகளிலும், பழச்சாறு, குளிர்பானங்கள் அருந்த மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஐஸ், அன்னாசி பழம் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சாப்பிட்டனர். இதனால் பெரிய கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தர்பூசணி, இளநீர், ஐஸ் கடைகளில் நேற்று விற்பனை அமோகமாக நடந்தது.வெயிலின் தாக்கம் குறைவாக காணப்படும் இந்த காலத்தில் வெயில் வாட்டி வதைப்பது மக்களை மிகுந்த அவதிக்குள்ளாக்கி வருகிறது.

1 More update

Next Story