கடலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


கடலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடலூர்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி (டிசம்பர் 6-ந் தேதி) நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாநகராட்சி பகுதியில் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை, திருப்பாதிரிப்புலியூர்-திருவந்திபுரம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் இரவு, பகலாக போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்வதோடு, வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரும் வாகனங்களை ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் மறித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு பணி

மேலும் சிதம்பரம், விருத்தாசலம் உள்பட மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். அதுபோல் பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடனும், தீவிர சோதனை செய்தனர். மேலும் ரெயில்வே தண்டவாளங்களிலும், நடைபாதை பகுதியிலும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் போலீசார் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை செய்தனர். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் ரெயில் நிலைய பகுதியில் தீவிர சோதனை செய்யப்பட்டது.


Next Story