விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்
சுதந்திர தின விழா
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா அமுதப்பெருவிழாவாக நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, காந்தி சிலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பஸ், ரெயில் நிலையங்களில்
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் மற்றும் போலீசார் நவீன கருவிகள் மூலமாகவும், மோப்ப நாய் உதவியுடனும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.