வடுவூர், கூத்தாநல்லூரில் கொட்டித்தீர்த்த கனமழை


வடுவூர், கூத்தாநல்லூரில் கொட்டித்தீர்த்த கனமழை
x

வடுவூர், கூத்தாநல்லூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

திருவாரூர்

வடுவூர்;

வடுவூர், கூத்தாநல்லூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

சுட்டெரித்த வெயில்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. புரட்டாசி மாதத்தில் பொன் உருக காயும், மண் கரைய பெய்யும் என்று வெயில், மழையை உருவகப்படுத்துவார்கள். இதை நிரூபிக்கும் வகையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்தது. பகல் நேரத்தில் வெளியில் வந்த பொதுமக்கள் அக்னி நட்சத்திரம் வெயில் கூட பரவாயில்லை என்று கூறி வந்தனர்.

கொட்டித்தீா்த்த கனமழை

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவாரூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 99.2 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. நீடாமங்கலம் தாலுகாவில் 5 செ.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. வடுவூர் அருகே மன்னார்குடி சாலையில் உள்ள வடுவூர் புதுக்கோட்டை, எடமேலையூர், உள்ளிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெல் கதிர்கள் மழை நீரில் சாய்ந்தது.சம்பா முதற்கட்ட நடவு செய்திருந்த வயல்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. நேற்று மழை இல்லாததால் இந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். மேக வெடிப்புக்கு இணையாக கனமழை பெய்துள்ள போதும் தற்போது தான் மழை தொடங்குகிறது என்பதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து இதைப்போல மழை பெய்தால் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களில் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

கூத்தாநல்லூர்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கிய பலத்த மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால், மரக்கிளைகள், வாழை மரங்கள் முறிந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பல இடங்களில் குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. சில இடங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. கடந்த சில நாட்களாக வறண்டு கிடந்த வடபாதி தெற்கு பனையனார் மற்றும் புனவாசல் அன்னமரசனார் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

விவசாயிகள் வேதனை

நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-தற்போது குறுவை நெற்பயிர்கள் நல்ல விளைச்சல் அடைந்து உள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தோம். கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் அடித்தது. இதனால் குறுவை அறுவடையை சிறப்பாக செய்து விடலாம் என்று காத்திருந்தோம். மழை பெய்யும் என்று எதிர் பார்க்கவில்லை. ஆனால், திடீரென நள்ளிரவில் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story