கெலமங்கலம் அருகே கொட்டித்தீர்த்த கனமழை: 2 ஏரிகள் உடைந்து வெள்ளப்பெருக்கு


கெலமங்கலம் அருகே கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக 2 ஏரிகள் உடைந்தன. இதனால் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கன மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.

இந்த கன மழை காரணமாக தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலத்தை அடுத்துள்ள ஒசபுரம் மற்றும் செட்டி பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பின. இதையடுத்து அந்த ஏரிக்கரைகளில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏரிகளில் சேமிக்கப்பட்டிருந்த வெள்ளநீர் வீணாக வெளியேறி கரைபுரண்டு செல்கிறது.

மேலும் காளேப்பள்ளி, போடிச்சிபள்ளி, கூட்டூர், அக்கொண்டப்பள்ளி, சின்னட்டி, பைரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளும் கனமழையால் நிரம்பி உபரிநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.

பொதுமக்கள் தவிப்பு

ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீரானது சனத்குமார் ஆற்றிலும், ஏரிகளின் நீர்வரத்து பாதைகளிலும் வீணாக ஓடுகிறது. இந்த வெள்ளநீர் கெலமங்கலம் நகர பகுதியில் கலைஞர் நகர் என்ற இடத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இது தவிர கிராம சாலைகளிலும் வெள்ளநீர் மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கெலமங்கலம்-தேன்கனிக்கோட்டை சாலையில் பட்டாளம்மன் ஏரி உள்ளது. இந்த ஏரி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் தடுப்புச்சுவரை உடைத்து வெள்ளநீர் வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பசுமை குடில் சேதம்

கெலமங்கலம் பேரூராட்சி பகுதியில் 4 மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதால் மின்தடை ஏற்பட்டது. இந்த பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்க அப்பகுதிக்கு தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் முகாமிட்டுள்ளனர். மேலும் செட்டிப்பள்ளி ஏரிக்கரை உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறிய நிலையில், அந்த பகுதியில் விவசாயி ஒருவரின் பசுமை குடில் முற்றிலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.

மேலும் கெலமங்கலம் நகருக்குள் 2 வீடுகளும், சுற்றுவட்டாரத்தில் 2 வீடுகளும் மழைக்கு இடிந்து சேதம் அடைந்தன. இந்த மழை வெள்ளத்தில் கெலமங்கலத்தில் 9 ஆடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இதில் ஒரு ஆடு மட்டும் அங்குள்ள ஒரு வீட்டின் கூரைமீது ஏறி நின்று உயிர் தப்பியது. இந்த வெள்ள சேத பாதிப்புகளை தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.


Next Story