தேன்கனிக்கோட்டை பகுதியில் கனமழை
தேன்கனிக்கோட்டை பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
தேன்கனிக்கோட்டை
கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ்நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை பகுதியில் கனமழை பெய்ததில் 104 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தளியில் 50 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழைக்கு ஏரிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை பெரிய ஏரி, அர்தக்கூர் ஏரியில் இருந்து வரும் உபரிநீர் தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே பட்டாளம்மன் ஏரிக்கு செல்கிறது.
வீடுகளுக்குள் புகுந்தது
வனத்துறை சோதனை சாவடி அருகே உள்ள ராஜ கால்வாயை சிலர் ஆக்கிரமித்து கடைகள், வீடுகள், வனிக வளாகங்கள் கட்டிஉள்ளனர். அதனால் மழைநீர் வெள்ளம் செல்ல வழியில்லாமல் நேற்று இரவு பெய்த கனமழைக்கு வனத்துறை சோதனைச்சாவடி அருகே வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
கிருஷ்ணமூர்த்தி, சந்திமோகன், ராஜேஷ், ராஜா, குண்டம்மா, சூரி, ராமசந்திரன், நஞ்சப்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைநீரால் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள், உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் சோதனை சாவடி அருகே உள்ள சுரேஷ் என்பவரின் பேக்கரி கடை முன்பு அமைத்திருந்த ெஜனரேட்டர் மற்றும் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, 'பெரிய ஏரியில் இருந்து இருந்து வரும் வெள்ளநீர், அர்த்தகூர் ஏரியில் இருந்து வரும் வெள்ள நீர் வரும் ராஜ கால்வாயை சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், கட்டி உள்ளனர். அதனால் கால்வாய் குறுகி வெள்ளம் வீடுகளுக்குள் புதுந்துள்ளதால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பொருட்கள் சேதம் அடைந்தன. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார்கள்.