கும்பகோணம் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை


கும்பகோணம் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை
x

கும்பகோணத்தில் விடிய விடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் விடிய விடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த மழை

கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக கோடைவெயில் சுட்டெரித்தது. அவ்வப்போது கருமேகங்கள் திரண்டு வந்தாலும் மழை பெய்யாமல் கும்பகோணம் மக்களை மழை ஏமாற்றி வந்தது.இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கும்பகோணம் பகுதியில் விடிய, விடிய மழை பெய்தது. இரவு 11 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை காலை 6 மணி அளவில் நின்றது.திடீரென பெய்த மழையினால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.கும்பகோணம் புதிய பஸ் நிலையம், தாராசுரம் மார்க்கெட் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர் காற்று வீசியது. இந்த மழையால் கும்பகோணம் பகுதியில் கோடை சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு இடி- மின்னலுடன் அய்யம்பேட்டையில் பலத்த மழை பெய்தது.அய்யம்பேட்டை, பசுபதிகோவில், சக்கராப்பள்ளி, வழுத்தூர், மாகாளிபுரம், கணபதி அக்ரகாரம், மணலூர், பட்டுக்குடி, பெருமாள் கோவில், உள்ளிக்கடை ஆகிய பகுதிகளில் இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் இந்த பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் தற்போது விதைப்பு செய்துள்ள கரும்பு, உளுந்து வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

வாழை மரங்கள் முறிந்தன

பலத்த மழையால் ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்களும் முறிந்து விழுந்தது. இது குறித்த விவசாயிகள் கூறியதாவது:-

அய்யம்பேட்டை பகுதியில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது தான் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய முடியும். அதே சமயம் தற்போது விதைத்துள்ள கரும்பு, உளுந்து, எள் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழை தொடர்ந்தால் இந்த பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆனால் கோடை நெற் பயிருக்கும், வளர்ச்சி பருவத்திலுள்ள கரும்பு, வாழை பயிர்களுக்கும் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story