தொடர் மழை எதிரொலி: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை எதிரொலியாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக மற்றும் ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதுடன், உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் உசிலம்பட்டி பகுதிக்கு 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தற்போது மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனையடுத்து வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நேற்று வினாடிக்கு 1,383 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,823 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி இன்று அணையின் நீர்மட்டம் 67.72 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் முழுக்கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.