கனமழை எதிரொலி: 66 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் ; 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை


கனமழை எதிரொலி:  66 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் ;  5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
x

கன மழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியது. இதனால் 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தேனி

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது. இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று அணையின் நீர்மட்டம் 66.01 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 288 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் அணை விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தவுடன் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் 3-வது மற்றும் கடைசி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். அணை முழுக்கொள்ளளவை எட்ட உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story