தமிழகத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை


தமிழகத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை
x

தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் டெல்டா, தென் மாவட்டங்களில் வருகிற 25 (நாளை மறுதினம்), 26-ந் தேதிகளில் (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை விடைபெறும் நாளை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வரை இயல்பையொட்டி மழை பதிவாகியிருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மழை எதுவும் பதிவாகாததால், நேற்று இயல்பை விட ஒரு சதவீதம் மழை குறைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பருவமழை தொடங்குவதற்கு முந்தைய கணிப்பில், இந்த ஆண்டு இயல்பையொட்டி மழைப்பதிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, இனிவரக்கூடிய நாட்களில் பெய்யும் மழையை பொறுத்தே இயல்பையொட்டி மழை பதிவு இருக்குமா? என்பதை சொல்ல முடியும்.

தாழ்வு மண்டலம்

அந்த வகையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த தாழ்வு மண்டலம், நாளை (சனிக்கிழமை) மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

2 நாட்களுக்கு கனமழை

25-ந்தேதி (நாளை மறுதினம்) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களிலும் மிதமான மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

26-ந்தேதி (திங்கட்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தாழ்வு மண்டலம் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகருவதால், தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், 'தலைஞாயிறு 5 செ.மீ., திருப்பூண்டி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் தலா 4 செ.மீ., திருவாடானை, கோடியக்கரை, பேராவூரணி தலா 2 செ.மீ., நாகுடி, வாலிநோகம், ஆர்.எஸ்.மங்கலம், நாகப்பட்டினம், திருக்குவளை, நாலுமுக்கு தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.


Related Tags :
Next Story