ஒரு மணி நேரம் பலத்த மழை- வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி


மதுரையில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை


மதுரையில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையில் மழை

மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்படி 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகி இருந்தது. சில தினங்களாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை நேரத்தில் அதிகமாக வெயில் இருந்தது. நேரம் செல்ல, செல்ல மழைக்கான அறிகுறிகள் வெளிப்பட்டது. அதன்பின்னர், மாலை 5 மணியளவில் மதுரை நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணிநேரத்திற்கு மேல் நீடித்தது.

மழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மாலை நேரம் மழை பெய்ததால், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் கல்லூரி- பள்ளிகளுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மழையின் காரணமாக, பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், அரசரடி, தல்லாகுளம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடந்தது. மழையின் காரணமாக நகரின் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. மின்சாரம் இன்றி மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

மரம் விழுந்தது

சிம்மக்கல் தைக்கால் தெருவில் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திடீர்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் அங்கு சென்று, மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அழகர்கோவில் பகுதியிலும் நேற்று மாலை அரை மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மதுரை நகரில் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story