பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு


பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு
x

தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழையால் பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. தெருக்களில் மழைநீருடன்சாக்கடை நீரும் கலந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழையால் பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. தெருக்களில் மழைநீருடன்சாக்கடை நீரும் கலந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

டெல்டா மாவட்டங்களில் மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் பனியின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மூடு பனி காணப்பட்டது. குளிரும் அதிக அளவில் நிலவி வந்தது. மேலும் பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் கடும் குளிரும் நிலவி வந்தது.இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்ட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பனியின் தாக்கமும் குறைந்து வந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கமும் குறைந்து வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

பலத்த மழை

இந்த நிலையில் தஞ்சை மாநகரில் நேற்று காலை 6 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது பலத்த மழையும் கொட்டியது. காலை 11 மணிக்கு பலத்த மழை பெய்தது. 20 நிமிடம் மழை நீடித்தது. பின்னர் மீண்டும் 11.45 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.இதே போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும், மற்ற நேரங்களில் லேசான தூறலுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வியாபாரிகள் பாதிப்பு

இந்த மழை காரணமாக தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. அண்ணா சிலை பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டதால் வாகனங்கள் மழைநீரில் நீந்தி சென்றன. கீழவாசல் பகுதிகளில் தரைக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.தஞ்சை பூக்கார 2-வது தெருவில் சாலையில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. 200 மீட்டர் தூரத்துக்கு மழைநீர் சாலையில் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் இந்த பகுதியில் உடனடியாக தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மக்கள் சிரமம்

தஞ்சை வடக்கு வீதி பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள், பொதுமக்கள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழை காரணமாக குளிரின் தாக்கம் மேலும் அதிகமாக காணப்பட்டது.

வல்லம்

தஞ்சை அருகே உள்ள வல்லம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை வல்லம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. ஆலக்குடி மற்றும் மருத்துவக்கல்லூரி புறவழிச்சாலை பாலம் அருகே மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். வல்லம் கடைவீதியில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் மழைநீர் வடிகாலுக்காக பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் கடைவீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story