கணபதி பகுதியில் பலத்த மழை


கணபதி பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கணபதி பகுதியில் பலத்த மழை பெய்தது. மேலும் வெள்ளத்தில் கார் சிக்கியது.

கோயம்புத்தூர்

கணபதி

கணபதி பகுதியில் பலத்த மழை பெய்தது. மேலும் வெள்ளத்தில் கார் சிக்கியது.

பலத்த மழை

கோவை கணபதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் கோவை சத்தி சாலை அத்திப்பாளையம் பிரிவில் மழைநீர் தேங்கி நின்றது. அத்துடன், கழிவுநீரும் கலந்து வந்ததால், கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்தபடி வாகனங்கள் சென்றன. இதற்கிடையில் மழைநீர் தேங்கிய அந்த சாலையில் திரும்ப முயன்ற ஒரு கார், வெள்ளத்தில் சிக்கி கொண்டது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.

உயர்மட்ட பாலம்

இதேபோன்று மணியகாரம்பாளையம் அடுத்த உடையாம்பாளையம் பார்க்டவுன் குடியிருப்பு பகுதி 5-வது வீதியில் குட்டை போல் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வீடுகளுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் மரியராஜ் கூறும்போது, அத்திப்பாளையம் பிரிவில் உள்ள சாக்கடை கால்வாய், மழைநீர் வடிகால் ஆகியவை விரைவில் சீரமைத்து தூர்வாரப்படும். மேலும் சிறிய அளவில் உயர்மட்ட பாலம் அமைக்க முயற்சி எடுக்கப்படும் என்றார். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரிடம் தெரிவிக்கப்பட்டு, அந்த பகுதியில் தேங்கிய மழைநீரை எந்திரம் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Next Story