கழுகுமலை பகுதியில்விடிய, விடிய பலத்த மழை
கழுகுமலை பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலையில் விட்டு விட்டு மழை பெய்தது. இரவு 7 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் தெருக்கள், சாலைகளில் வெள்ளமாக மழை நீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
கனமழை காரணமாக கழுகுமலை நாராயணசாமி கோவில் தெரு, கிரிப்பிரகாரவீதி, திருமாளிகை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இப்பகுதியில் பெய்த மழையால் கழுகுமலை, லட்சுமிபுரம், ராமநாதபுரம், துரைச்சாமிபுரம், வெங்கடேஸ்வரபுரம், காலாங்கரைபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, பருத்தியை மானாவாரியாக பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.