கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை


கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 10 Aug 2023 8:15 PM GMT (Updated: 10 Aug 2023 8:15 PM GMT)

கொடைக்கானலில் கனமழை கொட்டித்தீர்த்தது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

திண்டுக்கல்

சுட்டெரித்த வெயில்

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வறண்ட வானிலையே நிலவியது. கோடைகாலத்தை மிஞ்சும் வகையில் வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டன. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.

ஏமாற்றிய மழை

வருண பகவானின் கருணை கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் திண்டுக்கல் நகரவாசிகள் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் திண்டுக்கல் நகர் பகுதியில் நேற்று மாலை திடீரென கார்மேகம் சூழ்ந்து கும்மிருட்டாக காட்சி அளித்தது.

இன்னும் சிறிதுநேரத்தில் பலத்த மழை பெய்து நம்மை மகிழ்விக்கும் என்று திண்டுக்கல் நகரவாசிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கார்மேக கூட்டம் சிறிதுநேரத்தில் கலைந்து சென்றது.

அதேநேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரித்த வெயிலை விரட்டியடிக்கும் வகையில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

முறிந்து விழுந்த மரம்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நேற்று காலை முதல் மிதமான வெப்பம் நிலவியது. மதியம் 1 மணி முதல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, சிறிதுநேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மற்றும் மிதமான மழை கொட்டித்தீர்த்தது.

இதனால் கொடைக்கானல் பஸ் நிலையம், ஏரிச்சாலை, அண்ணா சாலை, மூஞ்சிக்கல், அப்சர் வேட்டரி, டிப்போ உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், வில்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களிலும் மழை பெய்தது. கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையினால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

குளம்போல் தேங்கிய தண்ணீர்

இதேபோல் வத்தலக்குண்டுவில் நேற்று மாலை 4½ மணி முதல் 5½ மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வத்தலகுண்டு சுப்பிரமணிய சிவா பஸ் நிலையம் மழைநீரால் நிரம்பி குளம் போல் காட்சி அளித்தது. அந்த தண்ணீரில் நனைந்தபடி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்றனர்.

பகலில் சுட்டெரித்த வெயிலில் சிக்கிய வத்தலக்குண்டு மக்களுக்கு மாலையில் பெய்த மழை மகிழ்ச்சியை கொடுத்தது. வெப்பம் தணிந்து இரவில், இதயத்தை வருடும் இதமான குளிர்ந்த வானிலை நிலவியது. மேலும் வறட்சியின் பிடியில் சிக்கிய பயிர்களுக்கு நேற்று பெய்த மழை புத்துயிர் கொடுத்தது.

நத்தம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலும் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது. சாலை, தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்தபோது சூறாவளி காற்றும் சுழன்று அடித்தது.

வேரோடு சாய்ந்த மரம்

கடந்த 20 நாட்களாக நிலக்கோட்டை பகுதியில் வாட்டி வதைத்த வெயிலில் மாட்டிக்கொண்ட மக்கள் பரிதவித்தனர். இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் நிலக்கோட்டை பகுதியில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு இருந்த மரம் ஒன்று காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஆனால் அந்த மரத்தின் அடிப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 மொபட்டுகள் சேதம் அடைந்தன. இதேபோல் நிலக்கோட்டை பகுதியில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. திண்டுக்கல் உள்ளிட்ட சில இடங்களில் மழை பொய்த்திருந்த போதிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story