கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு


கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 23 Aug 2023 2:00 AM IST (Updated: 23 Aug 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் கனமழை கொட்டித்தீர்த்தது. வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திண்டுக்கல்

சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் நேற்று காலை முதல் மதியம் வரை மிதமான வெயில் அடித்தது. மாலை 4 மணிக்கு மேல் கருமேகங்கள் திரண்டு வானை ஆக்கிரமித்தன. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அப்சர்வேட்டரி, அண்ணா சாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, செண்பகனூர், உகார்த்தேநகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.

இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல நாட்களுக்கு பிறகு வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மழையில் நனைந்தபடியே சுற்றுலா பயணிகள் சிலர் அருவியை பார்த்து ரசித்தனர். இந்த மழையால் கொடைக்கானலில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதேபோல் நத்தம், உலுப்பக்குடி, வத்திபட்டி, பரளி, செந்துறை, சிறுகுடி, சமுத்திராபட்டி, மணக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவில் இதயத்தை வருடும் குளிர்ந்த காற்று வீசியது.


Next Story