கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் தொடர்மழை
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வனப்பகுதிகளில் பற்றி எரிந்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இதுமட்டுமின்றி காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் மீண்டும் துளிர்விட்டு புத்துயிர் பெற்று பசுமையாக காட்சி அளிக்கிறது.
இந்தநிலையில் கொடைக்கானலில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. மதியத்துக்கு பிறகு கருமேக கூட்டம் வானை ஆக்கிரமித்து, சூரிய ஒளி பூமியில் படராமல் தடுத்து இதமான சூழலை ஏற்படுத்தியது. மதியம் 1.30 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.
சிறிது நேரத்தில், அது கனமழையாக மாறி கொட்டித்தீர்த்தது. சுமார் 1½ மணி நேரம் மழை நீடித்தது. இதனால் கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
இதேபோல் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோழா அருவி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் மழையால் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
மேலும் வாரச்சந்தை நடைபெறும் நாளான நேற்று தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலையோரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நட்சத்திர ஏரி நேற்று மாலை நிரம்பியது. தற்போது ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோடைகாலத்தில் நட்சத்திர ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய, புதிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.