நெல்லை-தென்காசியில் பலத்த மழை-குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. குற்றாலம் மெயின் அருவி, மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. குற்றாலம் மெயின் அருவி, மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர் மழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி சாலை, வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை பகுதிகளில் காலையில் கன மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மணிமுத்தாறு
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
வெள்ளப்பெருக்கு தொடர்ந்ததால் நேற்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை கனமழை கொட்டியது. அப்போது சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
பாவூர்சத்திரத்தில் காலையில் கனமழை பெய்தது. இதுதவிர புளியங்குடி, சிவகிரி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் நேற்று முன்தினம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளில் ஒரு மணி நேர தடைக்கு பிறகு குளித்துச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றம்
இதன் காரணமாக நேற்று காலையிலும் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டியது. இதேபோன்று பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அனைத்து அருவிகளிலும் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
நேற்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தற்போது பள்ளி விடுமுறை நாள் என்பதால் அதிகமாக வந்திருந்த சுற்றுலா பயணிகளும் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
மெயின் அருவியில் நேற்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று சாரல் மழை பெய்தது.
----------------------------------------------------
ஊத்து பகுதியில் 85 மி.மீ. மழை
நெல்லை மாவட்டத்தில் அதிகப்படியாக ஊத்து பகுதியில் 85 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. அதே போல் மாஞ்சோலை பகுதியில் 75 மில்லி மீட்டர் மழையும், காக்காச்சி பகுதியில் 60 மில்லி மீட்டர் மழையும், சேர்வலாறு அணை பகுதியில் 58 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் பகுதியில் 47 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு;-
நெல்லை- 5.20, அம்பை- 28, சேரன்மாதேவி- 10.20, மணிமுத்தாறு- 16.60, நாங்குநேரி-8, பாளையங்கோட்டை-6, களக்காடு-14.20, மூலைக்கரைப்பட்டி-10.
------------------------
சேர்வலாறு அணை நீர்மட்டம்
100 அடியை தாண்டியது
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணையில் நேற்று முன்தினம் 89.70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 90.95 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 1999.17 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 807.25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மணிமுத்தாறு அணையில் நேற்று முன்தினம் 88.86 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 89.58 அடியாக உயர்ந்துள்ளது. 95.83 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 100 அடியை தாண்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100.26 அடியாக இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் கடனா அணை நீர்மட்டம் 70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 77.50 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 34 அடியாகவும் உயர்ந்துள்ளது.