நெமிலி, அரக்கோணம் பகுதிகளில் பலத்த மழை
நெமிலி, அரக்கோணம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் நெமிலி, சயனபுரம், ஆட்டுபாக்கம், திருமால்பூர், பள்ளூர், பனப்பாக்கம், வேட்டாங்குளம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.