ஊட்டியில் பலத்த மழை


ஊட்டியில் பலத்த மழை
x
தினத்தந்தி 23 May 2023 10:45 PM GMT (Updated: 23 May 2023 10:45 PM GMT)

ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலர் கண்காட்சியில் இடம்பெற்ற மலர்களை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலர் கண்காட்சியில் இடம்பெற்ற மலர்களை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பலத்த மழை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதனால் ஊட்டியில் மலர் கண்காட்சியை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இந்தநிலையில் நேற்று ஊட்டியில் காலை முதல் வெயில் அடித்தது. பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து ஒரு மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 2 மணி நேரம் விட்டு விட்டு பலத்த மழையாக பெய்தது.

கூட்டம் குறைந்தது

இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றது. சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாவரவியல் பூங்கா மலர் மாடம் பகுதியில் தண்ணீர் தேங்கியது. கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் ஒதுங்கி நின்றனர். இதமான காலநிலையில் பூங்காவை கண்டு களித்தனர். மலர் கண்காட்சியை ரசிக்க கூட்டம் அலைமோதிய நிலையில் மழை காரணமாக மதியத்திற்கு பின்னர் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது. மேலும் மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரியை பொருத்தவரை ஊட்டி நகரில் நேற்று அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. இதேபோல் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 64 சதவீதம் இருந்தது. இதைத்தொடர்ந்து மதியம் 3 மணிக்கு பின்னர் மழை குறைந்து மீண்டும் வெயில் அடித்ததால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு திரும்பினர்.


Next Story