புதுக்கோட்டையில் கனமழை - பஸ்சுக்குள் குடை பிடித்து பயணித்த மக்கள்...!
அன்னவாசல் பகுதியில் பெய்த மழையால் பஸ்சுக்குள் குடை பிடித்து பொதுமக்கள் பயணம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துகழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்கள் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குறை கூறுகின்றனர்.
அத்துடன் சில பஸ்களின் மேற்கூறைகள் சிதைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று இரவு புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர் வழியாக திண்டுக்கல்லுக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சென்றது. அப்போது அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் மழை பெய்தது. அன்னவாசல் அருகே பஸ் சென்றபோது அந்த பஸ்சின் மேற்கூறையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே பெய்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் குடை வைத்திருந்ததோர் குடை பிடித்து நனைவதில் இருந்து தப்பித்தனர். இதை ஒரு சிலர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.