தேனியில் கொட்டித்தீர்த்த கனமழை
தேனியில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.
தேனி நகரில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் தேனியில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழையாக உருவெடுத்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. அப்போது தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவில் சாக்கடை கழிவுநீரும், மழைநீரும் கலந்து ஆறாக ஓடியது.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். சிலர் சாக்கடை நீரில் இறங்கி பரிதவிப்புடன் நடந்து சென்றனர். இதேபோல், தேனி பழைய அரசு ஆஸ்பத்திரி சாலையில் இருந்து காந்திஜி நகர் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு வந்து சலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.