தேனியில் கொட்டித்தீர்த்த பலத்த மழை; ரெயில்வே தண்டவாளத்தில் மரம் விழுந்தது


தேனியில் கொட்டித்தீர்த்த பலத்த மழை; ரெயில்வே தண்டவாளத்தில் மரம் விழுந்தது
x

தேனியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தபோது ரெயில்வே தண்டவாளத்தில் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது மரத்துக்கு அடியில் இருந்த 2 கடைகள் சேதம் அடைந்து, தந்தை, மகன் காயம் அடைந்தனர்.

தேனி

தேனியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தபோது ரெயில்வே தண்டவாளத்தில் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது மரத்துக்கு அடியில் இருந்த 2 கடைகள் சேதம் அடைந்து, தந்தை, மகன் காயம் அடைந்தனர்.

பலத்த மழை

தேனியில் இன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகல் 2 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. 1 மணி நேரத்துக்கும் மேல் இந்த பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக ஓடியது.

தேனி எடமால் தெருவில் மழைநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்டதால், தெருவில் ஆறுபோல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவிலும் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் மழைநீரும், கழிவுநீரும் தெருவில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மழை நின்று, தண்ணீர் வடிந்த பின்னர் சாலையில் குப்பைகள், கழிவுகள் பரவிக் கிடந்தன. இதனால், மக்கள் வெளியே நடந்து செல்ல அவதி அடைந்தனர். பங்களாமேடு பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் இதனால் சிரமம் அடைந்தனர்.

மரம் விழுந்து 2 பேர் காயம்

பலத்த மழையின் போது தேனி தபால் அலுவலகம் செல்லும் சாலையோரம் நின்ற பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்து ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தது. அப்போது மரத்துக்கு அடியில் இருந்த ஒரு சலூன் கடை, முறுக்கு தயாரிப்பு கடை ஆகிய 2 கடைகளும் சேதம் அடைந்தன.

இதில் சலூன் கடை அப்பளம்போல் நொறுங்கியது. அப்போது கடையின் உரிமையாளர் ஜெயப்பிரகாஷ் (வயது 62), அவருடைய மகன் முத்துக்குமார் (32) ஆகியோர் உள்ளே இருந்தனர். இவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6.15 மணிக்கு தான் ரெயில் என்பதால், அதற்கு முன்பாகவே தண்டவாளத்தில் இருந்து மரத்தை முழுமையாக அகற்றினர். இதனால், ரெயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை.


Related Tags :
Next Story