திருச்சி, மணப்பாறையில் பலத்த மழை
திருச்சி, மணப்பாறையில் பலத்த மழை பெய்தது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 9.30 மணி அளவில் திடீரென இடியுடன்கூடிய மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமமடைந்தனர். வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். ஸ்ரீரங்கம், பொன்மலை, கே.கே.நகர், எடமலைப்பட்டிபுதூர், ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
இதேபோல் மணப்பாறை பகுதியில் நேற்று இரவு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மணப்பாறை பஸ் நிலையம் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கி இருந்ததால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.