தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
கீழடுக்கு சுழற்சி
தமிழகத்தில் கடந்த 29-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி, ஆங்காங்கே பெய்து வருகிறது. இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் மட்டத்துக்கு மேல் 3.1 கிலோ மீட்டர் தூரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும் மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பரவலாக மழை
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது வெயிலும் தலைகாட்டியது. மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. 5.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பரவலாக பெய்த இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழைநீரை அகற்றுவதற்கான பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்-சாயர்புரம்
இதேபோல் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பின்னர் தொடர்ந்து லேசான மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சாயர்புரம் பகுதியிலும் மாலையில் சுமார் ½ மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
நெல்லை-தென்காசி
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
நெல்லை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்கவும், அனைத்து துறை அதிகாரிகளும் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
---------------