வால்பாறையில் கன மழை:சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


வால்பாறையில் கன மழை:சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

வால்பாறையில் பெய்து வரும் கன மழையால் சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் பெய்து வரும் கன மழையால் சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொட்டித்தீர்க்கும் கன மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவையில் அவ்வப்போது கன மழை பெய்கிறது. வால்பாறை பகுதியில் இரவு பகலாக விட்டு விட்டு கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வால்பாறை பகுதியில் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து கொண்டேயிருக்கிறது.இதனால் ஆறுகள், நீர் வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் உள்ள மேல்நீரார் அணை, கீழ் நீரார் அணை ஆகிய அணைகளுக்கு வரும் மழைத் தண்ணீர் மற்றும் ஆறுகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வரக்கூடிய தண்ணீர் முழுவதும் சோலையாறு அணையை சென்றடைந்து வருவதால் வினாடிக்கு வினாடி சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தண்ணீர் வெளியேற்றம் அதிகரிப்பு

இதன் காரணமாக கடந்த 11-ந்தேதி சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மதகுகள் அடைக்கப்பட்டது. மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்து 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியது. இதனால் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியிலிருந்து மீண்டும் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அணைக்கு வினாடிக்கு 6,866.98 அடி தண்ணீர் வந்தது. மேலும் அணையில் இருந்து 6,501.82 கன அடிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மரம் முறிந்து விழுந்தது

கனமழை காரணமாக வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் நேற்று பார்வைஎஸ்டேட் பகுதி அருகே மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதே போல் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 37 -வது கொண்டை ஊசி வளைவு அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

வால்பாறை பகுதி முழுவதும் கடுமையான குளிரும் பனிமூட்டமும் நிலவி வருவதால் வால்பாறை பகுதி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது


Next Story