விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பலத்த மழை


விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பலத்த மழை
x

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. விக்கிரமசிங்கபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் மதியம் 1.45 மணியளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. சுமார் 1¼ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

விக்கிரமசிங்கபுரம் ராமலிங்கபுரம் வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாறுகால், ஓடைகளில் குப்பைகள் தேங்கி கிடந்ததால், மழைநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் குளம் போன்று தேங்கியது. மேலும் அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதில் ஒரு வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால், பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு சிரமப்பட்டனர். எனவே மழைநீர் வடியும் வகையில் வாறுகால், ஓடைகளை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நேற்று பகலில் மணிமுத்தாறு அணை பகுதியில் 10 மில்லி மீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து நீடித்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 92.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 719 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக வினாடிக்கு 1,650 கன அடி வீதம் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

ஆற்றில் இருந்து கன்னடியன் கால்வாய், மருதூர் கிழக்கு கால்வாய், ஸ்ரீவைகுண்டம் தெற்கு மற்றும் வடக்கு கால்வாய்களில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 53.65 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 59 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பெருங்காலில் வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- அம்பை-9, சேரன்மாதேவி-4, நெல்லை-4, கன்னடியன் அணைக்கட்டு-1, கொடுமுடியாறு அணை-20.


Next Story