ஏற்காட்டில் கொட்டி தீர்த்த கனமழை


ஏற்காட்டில் கொட்டி தீர்த்த கனமழை
x
சேலம்

ஏற்காடு:-

ஏற்காட்டில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று வந்தனர். இந்த நிலையில் சேலம்-ஏற்காடு பிரதான சாலை இடிபாடுகள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

அந்த சாலை மூடப்பட்டதாலும் அனைத்து வாகனங்களும் குப்பனூர் சாலை வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குப்பனூர்-ஏற்காடு சாலையில் அனைத்து வாகனங்களும் செல்ல போதிய வசதி இல்லாததால் சாலையிலேயே அணிவகுத்து நின்றன.

இதன் காரணமாக குப்பனூர் வழியாக ஏற்காடு வர சுமார் 4 மணி நேரம் ஆனதாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

கனமழை

இதனிடையே ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு திடீெரன மழை பெய்ய தொடங்கியது. மாலை 6.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் ஏற்காட்டில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த இதமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் உள்ள சந்தைபேட்டை வணிக வளாகத்தை ஒட்டி கடந்த மாதம் நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்த போது அந்த வடிகால் வாய்க்காலில் சரியான முறையில் வழி இல்லாததால் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை ஓட்டி சென்றனர்.


Related Tags :
Next Story