ஏற்காட்டில் பலத்த மழை; காந்தி பூங்காவை தண்ணீர் சூழ்ந்தது
ஏற்காட்டில் பெய்த பலத்த மழையினால் அங்குள்ள காந்தி பூங்காவை மழைநீர் சூழ்ந்தது.
பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மேட்டூர், ஏற்காடு, சங்ககிரி, ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அங்குள்ள காந்தி பூங்காவில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாமல் தவித்தனர். தொடர் மழையினால் அங்கு கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் அவதியுற்றனர். மேலும் அவர்கள் இரவில் வீட்டைவிட்டு வெளியே வரமால் முடங்கினர்.
47.80 மில்லி மீட்டர் மழை
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக மேட்டூரில் 47.80 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ஏற்காடு-17.40, சங்ககிரி-17.10, ஓமலூர்-15, எடப்பாடி-14.40, காடையாம்பட்டி-9 ஆகும். சேலம் மாநகரில் காலையில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.