வால்பாறையில் விட்டு விட்டு கனமழை: வனப்பகுதி நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
வால்பாறையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் சோலையாறு அணை, நீராறு அணை, சின்னக்கல்லாறு அணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. மேலும் ஆறுகள், நீரோடைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து இல்லை. வனப்பகுதியில் உள்ள சில நீரோடைகள் வறண்டு உள்ளன.
தற்போது சோலையாறு அணையில் இருக்கும் தண்ணீர் மூலம் வருகிற 10 நாட்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும். மேலும் தென்மேற்கு பருவமழை முடிய உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. தென்மேற்கு பருவமழை குறைவை ஈடுகட்டும் வகையில் வடகிழக்கு பருவமழை கிடைத்தால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
நீரோடைகளில் தண்ணீர்
இதற்கிடையில் வால்பாறை பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளுக்கு பெரியளவிலான தண்ணீர் வரத்து ஏற்படவில்லை. இருந்தாலும், வனப்பகுதியில் உள்ள நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.