தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குமரி கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதேநேரம் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 18 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) வங்க கடல் பகுதியையொட்டி இலங்கை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக இருக்கிறது.

இது அதற்கடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வடமேற்கு திசையில் நகர உள்ளது. அதன் காரணமாகவும் வரும் நாட்களில் தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான சூழல் அதிகமாக உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோடியக்கரை 9 செ.மீ., ராமேஸ்வரம் 8 செ.மீ., கொட்டாரம், குலசேகரப்பட்டினம் தலா 7 செ.மீ., வேளாங்கண்ணி, வத்திராயிருப்பு, சிவகிரி, பெருஞ்சாணி அணை, முத்துப்பேட்டை தலா 6 செ.மீ. என மழை பெய்துள்ளது.

மேலும் வைப்பார், பிலவக்கல், புத்தன் அணை, சேரன்மகாதேவி, பேச்சிப்பாறை, மேட்டுப்பாளையம், வெம்பக்கோட்டை, தாராபுரம், தென்காசி, சங்கரன்கோவில், நாகப்பட்டினம், பாம்பன் தலா 5 செ.மீ., அம்பாசமுத்திரம், களியல், திருக்குவளை, சிவலோகம், வேப்பூர், ராமநாதபுரம், தஞ்சை பாபநாசம், ராஜபாளையம், தக்கலை, காட்டுமயிலூர், ஊத்துக்குளி, ஆயிக்குடி, செய்யார், வேடசந்தூர், மணிமுத்தாறு, சூரங்குடி, தங்கச்சிமடம், அண்ணாமலைநகர் தலா 4 செ.மீ. என பல இடங்களில் மழை பெய்திருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Next Story