கனமழை: தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!

கோப்புப்படம்
நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்காசி,
மிக்ஜம் புயல் தாக்கத்தின் காரணமாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே தென்கிழக்கு அரபிக்கடல், அதனையொட்டிய மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே கனமழை காரணமாக நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.