கனமழை எச்சரிக்கை எதிரொலி: தஞ்சை வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை,
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து நாளை (வியாழக்கிழமை) காலை வட தமிழக கடலோர பகுதியின் அருகில் வந்தடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 10 குழுக்கள் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரக்கோணத்தில் இருந்து மீட்பு குழுவினர் தஞ்சை மாவட்டத்திற்கு இன்று வந்துள்ளனர். மீட்பு பணிக்காக 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தஞ்சை வந்துள்ளது. இவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு, மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பின்னர் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கன மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.