நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை


நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

விழுப்புரம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர், குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மழை சிறிதுநேரம் தூறிக்கொண்டே இருந்த நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் சூறாவளி காற்று மற்றும் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

தாழ்வான பகுதியில் தேங்கிய தண்ணீர்

இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பெய்யத்தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

பலத்த காற்றுடன் கூடிய மழையின்போது பல இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்ததால், விழுப்புரம் அருகே கோணங்கிப்பாளையம், நன்னாட்டாம்பாளையம், குச்சிப்பாளையம், ஆனாங்கூர், ராகவன்பேட்டை, பொன்னங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அறுந்து கிடந்த மின்வயரை சரிசெய்து சீரான மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் விக்கிரவாண்டி, கஞ்சனூர், திண்டிவனம், வானூர், ஆரோவில், மரக்காணம், கோட்டக்குப்பம், செஞ்சி, செம்மேடு, கெடார், அனந்தபுரம், மேல்மலையனூர், மனம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

செம்மேடு - 76.40

மணம்பூண்டி- 46

கெடார்- 40.50

அவலூர்பேட்டை- 34.20

அனந்தபுரம்- 33

நேமூர்- 30

வளவனூர்- 26

வானூர்- 25

கோலியனூர்- 24

திண்டிவனம்- 23

முண்டியம்பாக்கம்- 21.50

மரக்காணம்- 19

முகையூர்- 19

வல்லம்- 16.20

வளத்தி- 16

சூரப்பட்டு- 15

விழுப்புரம்- 13

கஞ்சனூர்- 12

செஞ்சி- 12

திருவெண்ணெய்நல்லூர்- 8

அரசூர்- 6


Next Story