திருப்புவனத்தில் இடி, மின்னலுடன் கனமழை
திருப்புவனத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருப்புவனம்
கனமழை
திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரத்தில் லேசான மழையும் பெய்து வந்தது. அதேபோல் நேற்று முன்தினம் பகலில் வெயில் அடித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து இரவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து கனமழை பெய்தது.
இதையடுத்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராமப் பகுதிகளில் சாலைகள், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. நகர் பகுதியில் தாழ்வான சில இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.
மின்வெட்டு
மேலும் இந்த மழையால் திருப்புவனம் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் இரவில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். நேற்று முன்தினம் இரவு திருப்புவனத்தில் 32.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.