விழுப்புரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை


விழுப்புரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

விழுப்புரம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 8 மணியளவில் பலத்த காற்று வீசியது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இரவில் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை பெய்தது.

சாலையில் ஓடிய தண்ணீர்

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை, நேருஜி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் சாலை, கே.கே.சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுபோல் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமப்பட்டனர். அதுபோல் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியது. திடீரென பெய்த இந்த மழையினால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த மழையினால் வெப்பம் தணிந்து இரவில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story