திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கனமழை


திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கனமழை
x

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த நில நாட்களாக கோடைகாலம் போல் வெயில் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே செல்ல அஞ்சினர். இந்த நிலையில் நேற்று திருச்சி மாநகரில் வழக்கம்போல் காலை முதலே கடுமையான வெயில் இருந்தது. பகல் பொழுதிலும் கோடை காலத்தை போல வெயில் சுட்டெரித்தது.

இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலையோரங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

மின்தடை

திருச்சி மத்தியபஸ்நிலையம், சத்திரம் பஸ்நிலையம், ஸ்ரீரங்கம், உறையூர் என பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதேபோல் மண்ணச்சநல்லூர், சமயபுரம், திருப்பைஞ்சீலி உள்ளிட்ட மண்ணச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளிலும், லால்குடி, புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்தததால் திருப்பைஞ்சீலி உள்ளிட்ட பகுதிகளில் இரவு மின்தடை ஏற்பட்டது.

முசிறி

முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, தாதம்பட்டி, கார்த்திகைபட்டி தோழூர்பட்டி, கல்லூர்பட்டி நாகைநல்லூர் கவரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சோளம், கம்பு, கடலை, உள்ளிட்ட பயிர்களை விதைக்க தயாராகி உள்ளனர். இந்த மழையால் கிராம பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

தா.பேட்டை-துறையூர்

தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் இடி, மின்னலுடன் பரவலாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. துறையூரில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

தொட்டியம்

இதேபோல் தொட்டியம், காட்டுப்புத்தூரில் சுமார் 2 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. கரும்பு, சோளம், வாழை உள்ளிட்ட பயிர்களின் பருவத்துக்கு ஏற்ப மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story