கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை - அருவிகளில் வெள்ளப்பெருக்கு


கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை - அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x

கொடைக்கானல் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை சுமார் இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று இரவு முதல் மழை பெய்த நிலையில் இன்று காலை வெப்பம் நிலவி இயல்புநிலை திரும்பியது. அதனை தொடர்ந்து மீண்டும் பிற்பகல் சுமார் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோலாஅருவி உட்பட பல்வேறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏரியைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். அத்துடன் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவ மாணவியர் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பினர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாலை நேரத்திலேயே கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனிடையே வார விடுமுறை முடிவடைந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.


Next Story