அரியலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை
அரியலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இன்று பகல் நேரத்தில் குடை இல்லாமல் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் இரவு 7 மணியளவில் திடீரென வானம் இருண்டு மேகக்கூட்டம் திரண்டு வந்தது. பின்னர் இடி-மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மழையின் காரணமாக கடலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கழுமங்கலம், முனியத்திரையான்பட்டி, தத்தனூர், மனகெதி, வெண்மான்கொண்டான், விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், நடுவலூர், காடுவெட்டாங்குறிச்சி பருக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.