மதுரையில் 3-வது நாளாக பலத்த மழை- சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்
மதுரையில் 3-வது நாளாக நேற்றும் மழை பெய்தது.
மதுரையில் 3-வது நாளாக நேற்றும் மழை பெய்தது.
தொடர் மழை
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, மதுரையில் கடந்த 2 தினங்களாக நள்ளிரவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகர் பகுதிகளை பொறுத்தமட்டில், பெரியார் பஸ் நிலைய பகுதிகள், எல்லீஸ் நகர், ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலையில் கூட மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றதை காணமுடிந்தது.
மேலும், ஆனையூர், தபால் தந்தி நகர், கோசாக்குளம், அவனியாபுரம், விரகனூர், ஒத்தக்கடை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. கோரிப்பாளையம், சிம்மக்கல், கருடர் பாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் அவதி அடைந்தனர். காலை நேரத்தில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் ேபாக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டனர்.
இதுபோல், தொடர்மழை காரணமாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வைகை, பெரியாறு அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
3-வது நாளாக மழை
மதுரையில் 3-வது நாளாக நேற்று இரவு 8 மணியளவிலும் நகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தது. இதனால், வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்ற காட்சிகளை காணமுடிந்தது. வாகன போக்குவரத்து அதிகமான நேரம் என்பதால், பெரியார், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மதுரையில் தொடர்ந்து 3-வது நாளாக மழை பெய்ததால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழையால் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். நேற்று நள்ளிரவிலும் தொடர்ந்து தூறலுடன் மழை பெய்தது.