நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ரெயில் சேவை ரத்தானதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ரெயில் பாதையில் மண்சரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர், பர்லியாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு- ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் ரெயில் தண்டவாளத்தில் பெரிய, சிறிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. ரெயில் பாதையோரத்தில் இருந்த மரத்தின் கிளைகளும் குறுக்கே சாய்ந்து விழுந்து காணப்பட்டது.

பாதி வழியில் நிறுத்தம்

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப் பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 140 சுற்றுலா பயணிகளுடன் மலை ரெயில் புறப்பட்டு சென்றது. மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் கல்லாறு ரெயில் நிலையத்தை அடைந்தது. அங்கு ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு குறித்து தெரிய வந்தது. உடனே மலை ரெயில் பாதி வழியில் கல்லாறு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து கல்லார் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலைரெயில் சேவையை ரயில்வே நிர்வாகம் நேற்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்தது.

வெடிவைத்து தகர்ப்பு

இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம், குன்னூர் ரெயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மலை ரெயில் இருப்புப்பாதை பொறியாளர் விவேக் குமார் மேற்பார்வை யில் தொழிலாளர்கள் ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெரிய மற்றும் சிறிய பாறாங்கற்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாதையை சீரமைக்கும் மணி முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் மலை ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குன்னூர் ஊட்டி மலை ரெயில் சேவை தொடர்ந்து நடைபெறும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலை ரெயில் சேவை ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு -ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு ரெயில் தண்ட வாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் சேவையை ரெயில்வே நிர்வாகம் நேற்று ஒருநாள் ரத்து செய்திருந்தது.

ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர் கள் ஈடுபட்டனர். காலை தொடங்கிய பணி மாலை வரை நீடித்தது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் மேட்டுப்பாளையம்- ஊட்டி, ஊட்டி -மேட்டுப்பாளையம் மலை ரெயில் சேவை 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.


Next Story