ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழை-காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது


தினத்தந்தி 1 Sept 2023 6:00 AM IST (Updated: 1 Sept 2023 6:01 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழையால் காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது.

நீலகிரி


ஊட்டி


ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழையால் காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது.


ஊட்டியில் கனமழை


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கு இடி -மின்னலுடன் கூடிய, லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.


முன்னதாக நேற்று காலை முதல் நன்றாக வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பின்னர் வானம் மப்பும் மந்தாரமுமாக மாறியது. இதையடுத்து மதியம் 1 மணியிலிருந்து ஊட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து கொண்டே இருந்தது.


இதனால் ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் ெரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நின்றது. இதன்காரணமாக வாகனங்கள் தத்தளித்தபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து சென்றன. மேலும் ஊட்டி மார்க்கெட் முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடியதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை பெய்ததால் ஓணம் விடுமுறைக்கு இங்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரும் சிரமம் அடைந்தார்கள்.


காய்கறி தோட்டங்களை சூழ்ந்தது


ஊட்டி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக கேத்தி பாலாடா பகுதியில் காய்கறி தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதில் கேரட், பீட்ரூட், கிழங்கு பயிரிட்ட தோட்டங்களில் பல்வேறு ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதமாகியுள்ளது. இதேபோல் குன்னூர் கொல்லிமலை பகுதியில் பெய்த மழை காரணமாக உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.


இன்றும் மழைக்கு வாய்ப்பு


இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 1 முதல் 3 நாட்கள் வரை தண்ணீர் தேங்கினால் காய்கறி செடிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதற்கு மேல் வெயில் இல்லாமல் தண்ணீர் தேங்கினால் மட்டும்தான் பாதிப்பு ஏற்படும். இது குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது என்றனர்.


இந்தநிலையில் நீலகிரியில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மதியத்திற்கு பின்னர் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 18 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு 81 சதவீதம் இருக்கும் என்றும் காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோத்தகிரி


கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அடிக்கடி பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் குளிரான கால நிலை நிலவியது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி கோத்தகிரியில் 5 மில்லி மீட்டர் மழையும், கீழ் கோத்தகிரியில் 2 மில்லி மீட்டர் மழையும், கோடநாட்டில் 16 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியிருந்தது.




1 More update

Related Tags :
Next Story