ஊட்டி, கொடைக்கானலில் கனமழை: சாலையில் ராட்சத பாறாங்கற்கள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி, கொடைக்கானலில் கனமழை பெய்தது. ஊட்டி - கோத்தகிரி சாலை பகுதியில் ராட்சத பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக்காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மதியம் 3 மணி வரை விடாமல் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து லேசான மற்றும் சாரல் மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்தது.
ஊட்டியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.
சாலையில் விழுந்த ராட்சத பாறாங்கற்கள்
இதற்கிடையே நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் மடித்துறை என்ற இடத்தில் அமைந்துள்ள மலையின் செங்குத்தான பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து 2 ராட்சத பாறாங்கற்கள் திடீரென உருண்டு சாலையில் விழுந்தன. தொடர்ந்து விழுந்த வேகத்தில் பாறாங்கற்கள், சாலையின் தடுப்பு மீது மோதி அருகில் இருந்த பள்ளத்திற்குள் உருண்டோடின. பாறாங்கல் விழுந்ததில் சாலையில் பெரிய பள்ளமே ஏற்பட்டது. மேலும் சாலை தடுப்பு சேதமடைந்து, அருகில் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்து கிடந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாறாங்கற்கள் உருண்டு சாலையில் விழுந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த சாலையை சீரமைக்கும் பணியில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில்...
மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நேற்று காலை முதல் மிதமான வெப்பம் நிலவியது. மதியம் 1 மணி முதல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து, சிறிதுநேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது.
மழையின்போது கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






