உசிலம்பட்டி அருகே கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின - விவசாயிகள் வேதனை
உசிலம்பட்டி அருகே கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர்.
நீரில் மூழ்கின
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம். இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட வின்னக்குடி, குறவடி, நாட்டாபட்டி, சொக்கத்தேவன்பட்டி, ஆரியபட்டி வாலாந்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் கோடை கால நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் நெற்கதிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. ஒவ்வொரு ஏக்கரிலும் சுமார் 40 மூடைகள் வரை அறுவடை செய்ய எதிர்பார்த்திருந்த நிலையில் 10 மூடைகள் கூட கிடைப்பது கடினம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சாய்ந்த நெற்கதிர்கள்
இதுகுறித்து விவசாயி பண்பாளன்(வயது 60) கூறியதாவது, கடந்த சில நாட்களாகவே காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தற்போது நெல்லில் பால் பிடித்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் காற்றுடன் பெய்த கன மழையினால் நெல் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதனால் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் அழுகி சேதமடைந்து விடும். இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை கணக்கிட்டு அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
மகசூல் பாதிக்கும்
வின்னக்குடியை சேர்ந்த விவசாயி தெய்வம்(50) கூறியதாவது, தற்போது கோடை நெல் சாகுபடி செய்துள்ளோம். நெல் விளைந்து அறுவடை செய்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கடந்த இரண்டு தினங்களாகவே பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டது. பால் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அனைத்து நெற்பயிர்களுமே சாய்ந்து நீரில் மூழ்கி விட்டது. இப்படி சாய்ந்து கிடப்பதால் நெல் மணியில் பால் பிடிப்பது முடியாத காரியம். சாய்ந்து கிடக்கும் நெல்கள் அனைத்தும் அவிந்து சேதமடைந்து விடும். இதனால் மகசூல் பாதி அளவுக்கு கூட கிடைக்காது. ஒரு ஏக்கருக்கு 40 மூடை வரை மகசூல் கிடைக்கும். எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த நெல் பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.