சேலத்தில் 2-வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை:குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி


சேலத்தில் நேற்று 2-வது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சேலம்

இடியுடன் மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கு இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. இதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக சேலம் மாநகரில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தெருக்களில் ஆறாக ஓடியது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. திருவாக்கவுண்டனூர், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி பைபாஸ் பகுதிகளில் பெய்த மழையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

2-வது நாளாக கனமழை

இந்நிலையில் சேலத்தில் நேற்று 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பிற்பகல் 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 4.45 மணி வரையும் வெளுத்து வாங்கியது. கலெக்டர் அலுவலகம், சூரமங்கலம், அழகாபுரம், கன்னங்குறிச்சி, கிச்சிப்பாளையம், களரம்பட்டி, அம்மாப்பேட்டை, குகை, அன்னதானப்பட்டி, பள்ளப்பட்டி, சங்கர்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பின்னர் நள்ளிரவிலும் தொடர்ந்து மழை நீடித்தது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு தங்களது வீடுகளுக்கு சென்றதை காணமுடிந்தது. சாலைகளிலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

காந்தி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கிநின்றதை காணமுடிந்தது. இதன் காரணமாக மாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர்.

குடியிருப்புகளில் தண்ணீர்

குகை மாரியம்மன் மெயின்ரோடு, சிவதாபுரம், சேலத்தாம்பட்டி பாறைக்காடு, மணக்காடு ராஜகணபதி நகர் உள்ளிட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து கால்வாயில் செல்ல முடியாமல் அங்குள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் அவர்கள் மழை நின்றபிறகு வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து வெளியே ஊற்றினர்.

இதேபோல், சேலம் பழைய பஸ்நிலையம், களரம்பட்டி, கிச்சிப்பாளையம், சங்கர் நகர், பள்ளப்பட்டி சினிமா நகர், ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, முள்ளுவாடி கேட்டில் இருந்து பால்மார்க்கெட் செல்லும் பாதை, அழகாபுரம் சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தெருக்களில் ஆறாக ஓடியது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

குறிப்பாக சேலத்தில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. எனவே, மழைநீர் தேங்கும் பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு சாக்கடை கால்வாய் வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மழையளவு

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

சேலம்-56, வீரகனூர்-45, ஓமலூர்-43, தம்மம்பட்டி-28, கரியகோவில்-17, தலைவாசல்-7, ஏற்காடு-6.2, கெங்கவல்லி-5, ஆத்தூர்-3, ஆனைமடுவு-3.


Next Story