அரவக்குறிச்சி பகுதியில் கடும் பனிப்பொழிவு
அரவக்குறிச்சி பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கடும் பனிப்பொழிவு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, மலைக்கோவிலூர், ஈசநத்தம், ஆண்டிப்பட்டிக்கோட்டை, நாகம்பள்ளி, வேலம்பாடி, கொடையூர், தடாகோவில் ஆத்துமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்த பனிப்பொழிவால் சாலைகள் மறைக்கப்பட்டிருந்தது. விவசாய பயிர்களும் வெளியில் தெரியாமல் பனியால் மூடப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகள் தங்களது விவசாய தோட்டத்திற்கு செல்லும் போது அதிக பனிப்பொழிவின் காரணமாக சிரமப்பட்டு சென்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி
அதேபோல் பனி காரணமாக அதிக குளிர் ஏற்பட்டது. அதிகாலையில் கூலி வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் கடும் பனிகாரணமாக தங்களது உடலை வருத்திக் கொண்டு அவதிப்பட்டு சென்றனர்.
சாலைகளில் செல்லும் வாகனங்கள் பனிப்பொழிவு காரணமாக விளக்குகளை எரிய விட்டு சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பொதுமக்களும் காலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளே முடங்கினர்.